சென்னையில் அதிகரித்த ஒலி மாசுபாடு

103

வழக்கத்தை விட நேற்று சென்னையில் ஒலி மாசுபாடு அதிகரித்துக் காணப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. புது ஆடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். எந்த அளவுக்கு உற்சாகமும் கொண்டாட்டமும் இருந்ததோ அந்த அளவுக்கு சுற்றுச் சூழல் மாசுபாடும் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்ததால் உண்டான புகை மூட்டம் சுவாசிக்கும் காற்றைப் பெருமளவில் மாசடையச் செய்துள்ளது. திநகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் பட்டாசு புகை மண்டலமாகக் காணப்பட்டது. காற்று மாசுபாட்டைப் போல் ஒலி மாசுபாடும் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று இயல்பை விட ஒலிமாசுபாடு அதிகரித்துக் காணப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 5 இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 6 மணி முதல் 10 மணி வரை ஒலிமாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான அறிக்கையை இன்று மாலை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட உள்ளது.