சிவன் கோவிலை அழித்துத் தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது – பாஜக

147

இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த ஆண்டு உ.பி அரசு வெளியிட்ட அம்மாநில சுற்றுலா தலங்களுக்கான வழிகாட்டியில் தாஜ்மஹால் இடம்பெறவில்லை. அது முதல் ஆரம்பித்த சர்ச்சைகள் தற்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக தாஜ்மஹாலில் எதுவும் இல்லை என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அது அவருடைய சொந்த கருத்து எனக் கூறி பாஜக கைவிரித்தது. இந்த நிலையில் தற்போது பாஜக ராஜ்ய சபா எம்.பி-ஆன வினய் கட்டியார், “முகலாய அரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால், இந்து அரசர்களால் கட்டப்பட்ட தேஜோ மஹாலயா எனும் சிவன் கோவிலை அழித்துக் கட்டப்பட்டதாகும்.

தாஜ்மஹால் தவிர்த்து வேறு எந்தச் சமாதியிலாவது மேலே இருந்து தண்ணீர் சொட்டுகள் வருவதைப் பார்த்து இருக்கிறீர்களா. இதில் இருந்தே தெரிகிறது ஷாஜஹான் இந்து கோவிலை அழித்துத் தான் தாஜ்மாஹாலை உருவாக்கி உள்ளார் என்று” எனத் தெரிவித்தார். தனது அரசு கேலண்டரில் தாஜ்மஹால் படத்தை இடம்பெறச் செய்து இப்பிரச்னைக்கு முடிவு கொண்டு வரலாம் என பாஜக அரசு முயற்சித்த நிலையில், அக்கட்சி எம்.பி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது மீண்டும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்தி உள்ளது. வினய் கட்டியார், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.