தமிழகத்தில் தீபாவளிக்கு முதல் நாளே 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

131

பண்டிகை காலங்களில் தமிழகம் முழுவதும் மது விற்பனை படு ஜோராக நடக்கும். வழக்கமான அளவை விடக் கூடுதலாக நடக்கும் மது விற்பனையால் அரசுக்குப் பெருமளவில் வருமானம் கிடைக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது 150 கோடி ரூபாய்க்கும் மேல் மது விற்பனை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளே 150 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்று இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 7.66 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இங்கு 7.25 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மது விற்பனையானது சரிவை சந்தித்து. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்தின் அளவு குறைந்து விட்டதாக அரசே தனது அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சமீபத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டது. விலை உயர்ந்தபோதும் தீபாவளி பண்டிகையின் போது விற்பனை அளவு மட்டும் குறையவில்லை. விலை உயர்வின் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.