டெல்லியில் காற்று மாசுபாடு அளவு கடந்த ஆண்டை விட குறைவு

104

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு அளவு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நிலவும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காற்று மாசுபாடு அங்கு அபாயகரமான நிலைமையில் உள்ளது. டெல்லி மாநகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் விளைவாக டெல்லியில் 3 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரி போன்றவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இவ்வாண்டு காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் விளைவாகத் தீபாவளிக்கு மறுதினம் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்து காணப்பட்டது.

மாசுபாடு இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கிறது என்றாலும், கடந்த ஆண்டை விட மாசுபாடு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 400-க்கும் மேல் இருந்த காற்று தரக்குறியீடு இந்த ஆண்டு 319-ஆக உள்ளது. அபாயகரமான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு தற்போது காற்று மாசுபாடு அளவானது டெல்லியில் முன்னேறி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.