நாகை அரசு போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலி

81

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடம் 43 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இங்கு பணி முடிந்து வரும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். இன்று அதிகாலை 3:15 மணி அளவில் இந்த கட்டிடத்தின் மேற்கூரையானது திடிரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த 13 பணியாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் முனியப்பன் என்பவர் முதலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, படுகாயமடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளனர்.

சிறு, சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெங்கடேசன் எனும் ஓட்டுநர் சிகிச்சை பலன் இன்றி சற்று முன்னர் உயிரிழந்தார் இதனால் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.