சும்மா சும்மா ‘லவ் ஜிஹாத்’ சொல்லாதீங்க: கேரளா ஹைகோர்ட்

62

இந்து பெண்ணுக்கும், இஸ்லாமிய ஆணுக்குமான திருமணத்தை ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் ரத்து செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டதால் இந்த திருமணம் செல்லும் என்றும், கேரளாவில் நடக்கும் எல்லா கலப்புத் திருமணங்களையும், லவ் ஜிஹாத் என கூறுவதை தவிர்க்க வேண்டும், என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

கண்ணுரை சேர்ந்த ஒரு இளம்பெண், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த மே மாதம் மாயமானார். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் ஹரியானாவில் இருப்பதை கண்டுபிடித்து, போலீசார் அவர்களை கேரளா கொண்டு வந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், அந்த பெண்ணை அவளது பெற்றோருடன் செல்ல உத்தரவிட்டது.

காதலனை மறக்க, அந்த பெண்ணை, அவளது பெற்றோர்கள், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு யோகா மையத்தில் சேர்த்து விட்டதாக தெரிய வந்தது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அந்த பெண்ணின் கணவன். நீதிபதிகள் அந்த பெண்ணை அழைத்து விசாரித்த போது, அவர் தன் பெற்றோருடன் இருப்பதற்கே விரும்புவதாக தெரிவித்தார். பின்னர் 4 நாட்கள் கழித்து, நீதிமன்றம் வந்தபோது, ஒரு நீதிபதியிடம் தன் கணவனுடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். யோகா மையம் என்கிற பெயரில் தன்னை இந்து மதத்திற்கு திரும்பவர வைக்க டார்ச்சர் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“வற்புறுத்தி மதம் மாற வைப்பது சட்டப்படி குற்றமாகும். அது எந்த மதமாகவே இருந்தாலும் சரி. ஆனால், மதம் மாறி திருமணம் செய்த ஒரே காரணத்தை கொண்டு ஒரு தம்பதியை எதிர்க்க கூடாது” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் அவர்களின் திருமணத்தை சட்டபூர்வமானது என தீர்ப்பளித்தனர். “மதம் மாறி நடக்கும் எல்லா திருமணங்களையும், லவ் ஜிஹாத் என்ற பெயரில் குறிப்பிட்டு வந்தால், கேரளாவில், மதங்களுக்கு இடையே உள்ள நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்” என நீதிபதிகள் கூறினார்கள்.

சில மாதங்களுக்கு முன், ஒரு இந்து பெண்ணை திருணம் செய்த இஸ்லாமியர், அவரை மதம் மாற வற்புறுத்தியதாக கூறி, அந்தத் திருமணத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.