60% சரிவை சந்தித்த பட்டாசு விற்பனை

67

இந்த ஆண்டு சென்னையில் மட்டும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனையானது 1 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். அக்டோபர் மாத துவக்கத்திலேயே பட்டாசு சத்தம் ஊரெங்கும் கேட்கும் அந்த அளவுக்கு தீபாவளி விற்பனை படு ஜோராக இருக்கும். இதனை நம்பி தான் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கையே உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல் சற்று டல்லாகவே இருந்தது. பெரும்பான்மையான இடங்களில் பட்டாசு கடைகள் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னரே திறக்கப்பட்டன. இதனால் பட்டாசு விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு போன்றவையும் காரணமாக கூறப்பட்டாலும், அரசின் அலட்சிய போக்கே இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி-ன் காரணமாக 14%-மாக இருந்த பட்டாசு மீதான வரி 28%-மாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 90% மக்கள் கிரெடிட் கார்டு மூலம் பட்டாசு வாங்கி உள்ளனர். கடந்த ஆண்டு 1000 கோடிக்கு மேல் விற்ற பட்டாசுகள் இந்த ஆண்டு 400 கோடி வரை மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதனால் பட்டாசு விற்பனையாளர்களுக்கு 60% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட கடைகள் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. உரிமம் வழங்குவதற்கு தீபாவளிக்கு 3 மாதத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை பெற வேண்டும். பண்டிகைக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக உரிமம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசின் அலட்சிய போக்கின் காரணமாக தீபாவளி முடிந்தும் பலருக்கு இன்னும் உரிமம் கிடைக்கவில்லை. சிலரோ முறைகேடான முறையில் உரிமம் பெறாமலேயே பட்டாசு விற்பனையை நடத்தி உள்ளனர்.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தீயணைப்பு துறை பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் வழங்கி உள்ளது. இதனால் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு முறையாக பின்பற்றாததே இதற்கு காரணம். நஷ்டம் தொடர்பாக தலைமை செயலரை சந்தித்து பேச உள்ளதாகவும், தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கச் செயலாளர் அனீஷ் தெரிவித்துள்ளார்.