அரசின் திட்டங்களை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க முடியும்: ப.சிதம்பரம்

83

மெர்சல் படத்திற்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘மத்திய அரசின் திட்டங்களை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க முடியும் என்ற சட்டம் வந்தாலும் வரும்’ என ப.சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பாஜகவின் திட்டங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு தொடர்பாக அவர் விமர்சனங்களை முன் வைத்தார். சமீபத்தில், குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படாததை தொடர்ந்து ‘பிரதமர் மோடி குஜராத் மாநில சட்டமன்ற தேதியை அறிவிப்பார்’ என கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது மெர்சல் படத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதை கிண்டல் செய்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம். மேலும் பராசக்தி படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்” என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.