தமிழக மீனவர்கள் நான்கு பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

55

கச்சத்தீவு அருகே பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 4 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாம்பன் பகுதியில் இருந்து நேற்று நாட்டுபடகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, அங்கு இலங்கை கடற்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

பின்னர் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு நாட்டுப்படகையும், அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தது. இந்த கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை தற்போது நாட்டுப்படகு மீனவர்களை பிடித்து வைத்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.