தொடங்கியது வடகிழக்கு பருவமழை

95

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியது. 2016-ஆம் ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2017-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தலைகாட்ட துவங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்தது. இயல்பை விட கூடுதல் மழை இந்த ஆண்டு பொழிந்ததாக கூறப்பட்டது. தென்மேற்கு பருவமழை முடிவடைய துவங்கியதை அடுத்து வடகிழக்கு பருவமழை வர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. ஆனால் மழை எப்போது துவங்கும் என உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இரு தினங்களுக்கு முன்னர் 26-ஆம் தேதி(இன்று) வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று முதலே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலை சென்னையின் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது. அண்ணா நகர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் மழை பெய்வதால் அலுவலகம் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.