ஓராண்டுக்கு பின்னர் இன்று நடைபெறுகிறது தாய்லாந்து மன்னரின் இறுதி சடங்கு

126

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின் இறுதி சடங்கு ஓராண்டுக்கு பின்னர் இன்று நடைபெறுகிறது.

தாய்லாந்து நாட்டில் நிலையான ஆட்சியை கொண்டு வந்ததில் மன்னர் பூமிபோலின் பங்கு மிக முக்கியமானது. சுமார் 70 ஆண்டு காலம் தாய்லாந்தை ஆட்சி செய்த அவர் அந்நாட்டு மக்களின் மிக விருப்பமான மன்னராக விளங்குகிறார். உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி தனது 88-வது வயதில் அவர் காலமானார். அவரை தொடர்ந்து அவரின் மகன் தாய்லாந்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பூமிபோலின் மறைவை தொடர்ந்து தாய்லாந்தில் ஓராண்டுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்தநிலையில், மன்னர் பூமிபோலின் உடல் இன்று சிதையூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்றே துவங்கி விட்டன. 165 அடி உயரம் உள்ள உள்ள தங்க தேரில் அவரது உடல் எரியூட்டும் இடத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. மன்னரின் இறுதி சடங்கை காண நேற்று முதலே மக்கள் தெருக்களில் கூட துவங்கி விட்டனர். பெரும்பாலான மக்கள் கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இறுதி சடங்கை காண்பதற்காக சாலைகளிலேயே நேற்று இரவு மக்கள் படுத்து உறங்கினர்.

நேற்று முதல் 5 நாட்களுக்கு இந்த இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதி சடங்கு பணிகளுக்காக தாய்லாந்து அரசு 90 மில்லியன் அமெரிக்கா டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது. இறுதி சடங்கிற்கு பின்னர் மன்னரின் சாம்பல் மீண்டும் அரண்மனைக்கே எடுத்து செல்லப்படும். இந்த இறுதி நிகழ்வில் அரச குடும்பத்தார் மற்றும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இறுதி சடங்கை பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் சாலைகளின் பல இடங்களில் டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன.