கட் அவுட், பேனர் விவகாரம்; தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

95

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

நேற்று சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்சனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், தனது வீட்டின் முன்பு தேவையற்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் நீதிபதி கூறுகையில், “மனுதாரர் வீட்டின் முன்பு இருக்கும் தேவையற்ற பேனர்கள் அனைத்தையும் அகற்ற காவல்துறை மற்றும் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்பின்னர் உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்கக்கூடாது” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அளித்து, இதை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆனால் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் தனிநீதிபதி அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என கூறி கட் அவுட், பேனர் வைப்பதற்கான தடையை நீக்க மறுத்துள்ளது.

இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க முடியாது, நாளை அல்லது அடுத்த வாரம் தான் விசாரிக்க முடியும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.