தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1032வது சதய விழா

105

புகழ்பெற்ற மாமன்னரான ராஜராஜ சோழனின் 1032வது சதய விழா தஞ்சாவூரில் நேற்றும் இன்றும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

உலக புகழ் பெற்று விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், கி.பி 985 ஆண்டு சதய நட்சத்திரத்தில், தான் முடிசூட்டிய நாளை ஒவ்வொரு ஆண்டும் சதய நாளாக தமிழக அரசு கொண்டாடுகிறது. தற்போது 1032வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சோழ மன்னர்களில் சிலர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முக்கியமானவரும், சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவரான ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவரது ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.

அந்த காலத்திலேயே தமிழக ஆட்சி வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய பெருமை அவரைச் சாரும். அதிலும் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் உருவாக காரணமானவர் இவரே. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் சோழர் கால கட்டிடக்கலையையும், அவர்களின் கடவுள் பற்றையும் பறை சாற்றுகிறது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு. இக்கோயிலின் அதிசய செய்திகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு புகழ்வாய்ந்த இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சதய விழாவை முன்னிட்டு இந்த வருடமும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் நேற்று முதலே கோயிலை முற்றுகையிட்டுள்ளனர். விழாவையொட்டி நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.