அடுத்த ஒரு மாதம் மழை வெளுத்து வாங்கும் – தமிழ்நாடு வெதர்மேன்

252

தமிழகத்தில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை விட தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிற வானிலை அறிக்கையை தான் அதிகமானோர் தற்போது நம்பி வருகின்றனர். அவர் சொல்வது போலவே நடந்து வருவதும் இதற்கு ஒரு காரணம். அதோ இதோ என்று வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. இது குறித்து நமது தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா.

தமிழகத்தில் உண்மையான வடகிழக்கு பருவமழை நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை துவங்கும் என அவர் தெரிவித்திருந்தார். அது போலவே நேற்று இரவு முதலே சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும். நவம்பர் முதல் டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடுத்த 30 நாட்கள் நல்ல மகிழ்ச்சியான நாளாக அமையும் என தெரிவித்துள்ளார். இவர் கூறுவதை பார்த்தால் நவம்பர் மாதம் ஏகப்பட்ட மழை விடுமுறை அறிவிப்பு வரும் போல் உள்ளது. அப்படி வந்தால் நிச்சயம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.

நேற்று இரவு சென்னையில் பெய்த மழை வெறும் ட்ரைலர் தான். உண்மையான ஷோ இன்று காலையில் இருந்து தான் ஆரம்பிக்க உள்ளது. மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டிருக்கும் காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக ராமேஸ்வரம், காஞ்சிபுரம், டெல்டா பகுதிகள், கடலூர், சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் நல்ல மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். அடுத்த ஒரு வாரத்திற்கு இது போல தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை இயல்பை விட குறைவாக பெய்யும் என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேனோ இயல்பான அளவை விட கூடுதல் மழை பொழிவு இருக்கும் என்கிறார். மேலும், பிபிசி நிறுவனமே வெள்ளம் வர போகிறது என்று சொன்னாலும் நம்பாதீர்கள். முதலில் மழை பெய்யட்டும். அப்புறம் வெள்ளத்தை பத்தி யோசிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.