சென்னையில் இன்று மீண்டும் வெளுத்து வாங்கும் மழை!!

76

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் பகல், இரவு என தொடர்ச்சியாக மழை பெய்தது. நேற்று முன்தினம் ஒருநாள் பெய்த மழைக்கே தண்ணீரால் சென்னை ஆட்டம் கண்டுள்ளது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளை சுற்றி தேங்கியிருந்தது. சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் போக்குவரத்தும் மிகவும் பாதிக்கப்பட்டது. கொரட்டூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தாம்பரம், வண்டலூர், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. பெரம்பூர், அம்பத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு ஏரிகளாக காட்சியளித்தன. மேலும் வியாசர்பாடி, பெரம்பூர் சாலை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி குளங்களாக மாறி உள்ளன. அங்குள்ள சுரங்கப்பாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் சுரங்கபாதைகளே மூழ்கும் அபாயம் நிலவுகிறது.

சென்னையின் ஒரு சில பகுதிகளில் நேற்று பகலில் இடைவெளி விட்டிருந்த மழை இரவு மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று காலை சாரலாக இருந்த மழை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிண்டி, அடையார், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் உட்புற பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இன்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மலை நீரில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விட்டதைத் தொடர்ந்து இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் மழைக்கே சென்னை நகரில் திரும்பிய திசை எல்லாம் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எப்போது மழை வரும் என காத்திருந்த மக்களுக்கு தற்போது மழை கொட்டித்தீர்ப்பதால் என செய்வதென்று தெரியாமல் உள்ளனர். நவம்பர் 5ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்னும் 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் சென்னை என்னவாகும் என்றே தெரியவில்லை.