ஐந்தாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை – இன்றுடன் முடிய வாய்ப்பு

43

சசிகலா உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை இன்றுடன் நிறைவு பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐந்தாவது நாளான இன்றும் விவேக், கிருஷ்ணபிரியா இல்லம் மற்றும் ஜெயா டிவி அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது. 5 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை இன்றோடு முடிவடைய வாய்ப்பு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்திற்கு சோதனைக்கு வந்த போது செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி மாநில செயலாளர் புகழேந்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அவரிடம் காலை 11:30 மணி அளவில் விசாரணையானது நடைபெற உள்ளது. பெங்களூருவில் உள்ள புகழேந்தி வீட்டில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.