லண்டனில் தாகூர் வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற மம்தா பானர்ஜி முடிவு

41

லண்டனில் உள்ள கவிஞர்  ரவீந்திநாத் தாகூர் வசித்த வீட்டை வாங்கி, அதனை மேற்கு வங்க அரசு சார்பில் நினைவில்லமாக மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி,  இருதினங்களுக்கு முன்பு லண்டன் சென்றுள்ளார். அங்கு பிரிட்டனுக்கான இந்தியத்தூதர் தினேஷ் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

அவர், இந்தியத்தூதரிடம்,  லண்டனில் உள்ள கவிஞர்  ரவீந்திநாத் தாகூர் வசித்த வீட்டை தாம் விலை கொடுத்து வாங்க விரும்புவதாகவும், அதை மேற்கு வங்க அரசு சார்பில் கவிஞரின் நினைவில்லமாக மாற்றப்போவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு மம்தா, லண்டன் சென்ற போதும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள  ரவீந்திநாத் தாகூர் வசித்த வீடு சுமார் 231.5 கோடி ரூபாய் (27 மில்லியன் பவுண்ட்ஸ்) என கணக்கிடப்பட்டுள்ளது.  தற்போது அதைவிட மதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ரவீந்திரநாத் தாகூர் 1912ம் ஆண்டு லண்டனில் உள்ள வீட்டில் வைத்து தான் ‘கீதாஞ்சலி’ யை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.  கீதாஞ்சலியை மொழியாக்கம் செய்ததற்காக, 1913-ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.