துவங்கியது ஜெயலலிதா மரண விசாரணை

90

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் தனது விசாரணையை சற்று முன்னர் துவங்கியது.

கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த விசாரணை கமிஷனிற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். முதல் கட்டமாக 15 பேருக்கு ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. இதில் 8 பேர் மட்டுமே பதில் அளித்து இருந்தனர்.

இதேபோல் ஜெயலலிதா கைரேகை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்களை அளிக்க விசாரணை கமிஷன் அளித்த காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது. இதனை அடுத்து இன்று தனது விசாரணையை ஆறுமுகசாமி துவங்கினார். மருத்துவர் சரவணன் இன்று காலை விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞருடன் வந்து ஆஜரானார். அவரிடம் ஆறுமுகசாமி தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹாலில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்களுடன் கூடுதல் ஆவணங்களை இன்று சரவணன் அளிக்க உள்ளார். விசாரணை குழுவிற்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிரஞ்சன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால் மருத்துவர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என தெரிகிறது. தற்போது வரை 9 பேர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர். 70 பேர் தபால் மூலம் தகவல்களை அனுப்பி உள்ளனர். இன்று கடைசி தினம் என்பதால் மேலும் பிரமாண பத்திரங்கள் மற்றும் தபால்கள் வரலாம் என தெரிகிறது.