தம்பிதுரைக்கு பதிலடி கொடுத்த மைத்ரேயன்

82

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து தான் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் தொண்டர்களின் உணர்வை தான் பிரதிபலித்து இருப்பதாகவும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைப்பிற்கு பின்னரும் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் இருந்து வந்ததாக அரசல் புரசலாக பேசப்பட்டது. இருவருக்குள்ளும் நாளுக்கு நாள் அதிகார மோதல் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ஒன்றாக இணைந்து அம்மா வழியில் ஆட்சியை நடத்துவதாகவும் இருவரும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் போட்ட பதிவால் ஓபிஎஸ் – இபிஎஸ் அதிகார மோதல் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகியும் மனங்கள் இன்னும் இணையவில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இடையேயான உறவு குறித்து தான் நேற்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வழக்கம் போல் மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மைத்ரேயன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்திருந்தார்.

தம்பிதுரைக்கு பதில் அளிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்” என கூறியுள்ளார். மைத்ரேயனின் இந்த பதிவால் ஓபிஎஸ் – இபிஎஸ் அணி இணைப்பிற்கு பிறகும் அவர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. மேலும், அணிகள் இணைப்பில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதையும் மைத்ரேயனின் பதிவு வெளிக்காட்டியுள்ளது.