இன்றைய கூகுள் டூடுளில் இருக்கும் ருக்மாபாய் யார் ?

82

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்குரியவர், ருக்மாபாய் ராவத். 1864ம் ஆண்டு  நவம்பர் 22-ம் தேதி மும்பையில் பிறந்தவர் ருக்மாபாய். இவர் சிறு குழந்தையாக இருந்தபோது தந்தை காலமாகி விடவே, தாயார் ஜெயந்தி பாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். ருக்மா பாய்க்கு 6 வயதான போது தாயார் ஜெயந்திபாய், தன்னைப் போலவே துணையை இழந்தவரான டாக்டர் ஷக்காராம் அர்ஜுன் என்பவரை 1870 ல் மறுமணம் செய்து கொண்டார். விதவைத் திருமணங்கள் அப்போதுதான் இந்தியாவில் நடைபெறத் தொடங்கியிருந்த காலம். சமூகத்தின் பலத்த எதிர்ப்புக்கிடையே தான் இந்தத் திருமணம் நிகழ்ந்தது. அக்கால வழக்கத்தை மீற முடியாமலும், தாயார் ஜெயந்தி பாயின் வற்புறுத்தலாலும் 10 வயது ருக்மா பாய்க்கும் உறவுக்காரரான சக்காராமுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரோ கல்வியறிவு இல்லாதவர். ஆனால் ருக்மா பாயின் படிப்பு, தொடர்ந்தது. இருவருக்கும் இடையில் இதுவே பெரும் முரணாகவும் மாறியது.

ருக்மா பாய் பம்பாயில் படித்த காலத்தில் பெண் குழந்தைகள் நான்காம் வகுப்புக்கு மேல் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத நிலையே இருந்தது. அதற்கு மேல் தந்தையின் உதவியுடன் வீட்டிலிருந்தவாறே படிக்கக் கற்றுக் கொண்டார். தந்தை அர்ஜுன் போலவே ஒரு மருத்துவராகி மனித குலத்துக்கு மருத்துவச் சேவை ஆற்ற வேண்டும் என்பது ருக்மாபாயின் வாழ்நாள் லட்சியமானது. அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் அவரது தந்தை டாக்டர் அர்ஜுன் பக்க பலமாக இருந்தார். பின்னர் அவரின் மறைவுக்கு பின் கணவர் சக்காராமின் தொந்தரவுகள் இரட்டிப்பாகவே, 21 ஆம் வயதில், விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார் ருக்மாபாய். இதற்கு இந்தியாவில் வாழும் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து 1887-ம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தது. கணவருடன் வாழவேண்டும், இல்லையேல் 6 மாதகாலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ருக்மாபாய் இந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை. விக்டோரியா மகாராணியின் உதவியால் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவரது கணவருக்கு ரூ.2000/- செட்டில்மெண்ட் தர வேண்டும் என நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதன் பின்னரே ருக்மாபாய் பல நண்பர்களின் உதவியுடன் இங்கிலாந்து சென்று மருத்துவம் படித்து 1894 ல் மும்பை திரும்பினார்.  தாயகம் திரும்பியவரிடம் அவரது தாய் ஜெயந்திபாய் முழு சுதந்திரத்தை தந்தார் என்றே சொல்ல வேண்டும். இன்றைய கால விவாகரத்து ஆன பெண்களுக்கே கூட கிடைக்காத சுதந்திரம், ஆறுதல், பல ஆண்டுகளுக்கு முந்தியே ஜெயந்திபாய் மூலம் ருக்மாபாய் கிடைத்தது. ஆம் “உன் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியை தருமோ அதை செய்” என்று தன் மகளுக்கு ஆறுதல் தரும் மொழிகளைக் கூறினார்.

தாயின் அறிவுரையின்படியே ருக்மாபாய், மும்பையை துறந்து சூரத் சென்று, தான் பெரிதும் நேசித்த, தன் வாழ்வின் லட்சியமான மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். 90 வயது வரை புகழ் பெற்ற மருத்துவராக வாழ்ந்து மறைந்தார்.இன்றைக்கும் இவர் பெயரில் பூனாவிலும் சூரத்திலும் மருத்துவமனைகள் உள்ளன. இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்ற முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரது 153-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.