தீபாவளி என்றால் என்ன ? ஏன் கொண்டாடுகிறோம் ?

0
41

diwaliதீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப் படுகின்ற ஓர் பண்டிகை. தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே ‘தீபாவளி’. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. இதைத்தவிர வேறு காரணங்கள் உண்டா என்ன?

ராமாயண தீபாவளி:
ராவணனை வதம் செய்ததும், ராமபிரான் அதிகாலை மூன்று மணிக்கு அயோத்தி வந்து சேர்ந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு ராமரை தரிசிக்க காத்திருந்த மக்கள் சீதையும், ராமரும் வரும் வழி நெடுக தீபங்களை ஏற்றினர். அந்த நாளே தீபாவளி என்றும் வழங்கப்படுகிறது.

வாமன தீபாவளி:
கருவில் இருக்கும் போதே விஷ்ணு பக்தனாக வளர்ந்தவர் பிரகலாதன். பிரகலாதனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த மகாபலி சக்கரவர்த்தி முடி சூட்டிக் கொண்ட நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடுபவர்களும் உண்டு. வாமன அவதாரம் எடுத்த நாராயணர், மகாபலிக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவ(மு)டி சூட்டியநாள் தீபாவளி என்பவர்களும் உண்டு.

ஜைன தீபாவளி:
ஜைனர்களின் குருவான வர்த்தமான மகாவீரர் முக்தி அடைந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

கொசுறு விஷயம்:
கி.பி. 1117-ல் கிடைத்த சாளுக்ய திரிபுவன மன்னரின் கன்னடக் கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று அறிஞர்களுக்கு மன்னன் பரிசு வழங்கி கவுரவித்த குறிப்பு உள்ளது. தீபாவளி பற்றி சரித்திரத்தில் உள்ள முதல் குறிப்பு இதுதான். சோழர் காலம் வரையில் தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் பெருமளவில் கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் மதுரையில்தான் தீபாவளித் திருவிழா அறிமுகமானதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.