ஒரு ருபாய் வரதட்சணை பெற்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர தத்

0
39

வரதட்சணை என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்றாலும், இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணத்தின் போது வரதட்சணை பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர தத் நடத்திய செயல் அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர தத்துக்கும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்வாதி ஜெய் பகவான் சர்மா என்பரின் மகளான ஷீத்தல் என்பவருக்கும் இன்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக ஒரு ரூபாயை பெண் வீட்டாரிடம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் யோகேஷ்வர தத்.

“எனது சகோதரிகளின் திருமணத்திற்கு, வரதட்சணை பணம் கொடுப்பதற்காக என் குடும்பத்தினர் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை கண்கூடாக நான் பார்த்துள்ளேன். எனவே நான் வளரும் போதே இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன். ஒன்று நான் மல்யுத்தத்தில் சாதித்து என் குடும்ப வறுமையை போக்க வேண்டும். இரண்டாவது என்னுடைய திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக பெற வேண்டும். இந்த இரண்டையுமே இப்போது நிறைவேற்றிவிட்டேன்” என யோகேஷ்வர தத் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு ஆசைகளும் தனது தந்தை மற்றும் குரு ஆகியோர் உயிரோடு இருக்கும் போதே நிறைவேற வேண்டும் என்ற யோகேஷ்வர தத்தின் ஆசை நிறைவேறியுள்ளதால், அவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.